என் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை!

Sittu Kuruvi / சிட்டுக்குருவி

நான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு கைப்பிடி அரிசியை போடுவார்கள். அதிகாலைப் பொழுதில் அந்த அரிசியைத் தேடி பத்துக்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகள் வரும். அவை அந்த அரிசியினை “கீச் கீச்” சத்தத்துடன் கொத்திக் கொத்தி உண்ணும். அந்த அழகை நான் ரசிக்கத் தவறுவதில்லை. அந்த சிட்டுக் குருவிகள் போட்டிப் போட்டுக் கொண்டு அரிசியை உண்ணும். சில நேரங்களில் திடீரென சண்டைப் போட்டுக் கொண்டு பறந்து ஓடி எங்கோ மறைந்துவிடும். எங்கே அந்த சிட்டுக் குருவிகள் என கண்கள் அலைபாயும். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஓடிவந்து விடுபட்ட அரிசிகளை உண்ணும். அப்போதுதான் தெரியும் அவைக்குள்ளான சண்டை கட்டுக்கடங்காத அன்பு தவழும் ஊடல், கூடலுக்கான பொய்ச் சண்டை என்பது. அந்த சிட்டுக் குருவிகளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என் மனதில் வேண்டிக் கொள்வேன். எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலையில் சுற்றித் திரியும் எனக்கு அந்த சிட்டுக் குருவிகள் மீது அப்படியொரு பாசம், நேசம், காதல்.

சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது குறித்து இணையத்தில் ஒரு பதிவினைப் படித்தேன். நவீன உலகில் செல்போன்களால் சிட்டுக் குருவி இனமே அழிந்துப் போகிறது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக் குருவிகளைக் கொன்று வருகின்றன. பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிட்டுக் குருவிகள் அந்தக்கால பழைய வீடுகளில் உள்ள தாழ்வாரங்களில் கூடுகட்டி வாழும். கிராமங்களில் வீடுகளின் சுற்றுச் சுவரில் அதற்கென பிரத்யேகமாக பொந்துகள் அமைத்துக் கட்டுவார்கள். எங்கள் பூர்வீக, அம்மா பிறந்த கிராமத்திலுள்ள வீட்டிலும் இதுபோன்ற பொந்துகள் இன்றைக்கும் உள்ளன. நீண்ட ஏணிப் போட்டு ஏறி அந்த பொந்துகளில் கம்பு, கேழ்வரகு, தினைப் போன்ற தானியங்களைத் தினமும் காலையில் போட்டு வைப்போம். அவற்றை சிட்டுக் குருவிகள் மட்டுமல்லாது பச்சைக்கிளி போன்ற பறவைகளும் வந்து உண்ணும். இன்றைய நவீன வீடுகளில் சிட்டுக் குருவிகளுக்கு இடமில்லை. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கோள்ளப்படுவது சற்று ஆறுதல் தருபவை.

இருபது ஆண்டுக் காலமாக வாடகைக்குக் குடியிருந்த எதிர்வீட்டுக்காரர்கள் நான்கு மாதத்திற்கு முன்னர் வீட்டைக் காலி செய்துவிட்டு, சொந்த வீட்டிற்குக் குடிப் போயினர். இனி அந்த சிட்டுக் குருவிகளுக்கு யார் அரிசி போடுவார்கள்? அவை ஏமாந்து போகாதா? அதேபோல், அந்த சிட்டுக் குருவிகள் பறந்து வந்து பார்த்து அரிசியின்றி ஏமாந்துப் போயின. அவைகளுக்குப் பசியாற வேறு எங்காவது தீனி கிடைக்கலாம். ஆனால், நாள்தோறும் தடையின்றி, உரிமையோடு உண்டு மகிழ்ந்த அந்த சிட்டுக் குருவிகளுக்கு இந்த ஏமாற்றம் தாங்க முடியாததுதான். என் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்காத அந்த சிட்டுக் குருவிகள் முதல் முறையாக என் பால்கனி கிரிலில் வந்து அமர்ந்து ஏக்கத்துடன் எதிர்வீட்டையும், அரிசி கிடக்கும் அழகிய கோலம் நிறைந்த தரையையும் பார்த்துப் பார்த்து விம்மின. அப்படியொரு சூழல் வந்ததன் காரணம்கூட அறியாத சிட்டுக் குருவிகளுக்கு இது துயரமானது. அந்த துயரம் என்னையும் வாட்டின. இரவு நேர தனிமையில் அந்த சிட்டுக் குருவிகள் நினைவில் வந்து என் மனதைப் பிழியும். இழப்புகளையும், துயரங்களையும் சுமந்து, சுமந்து வலியைத் தாங்கித் தாங்கி உரமேறிய என் மனது இவ்வளவு பலவீனமானதா என்பதை அக்கணத்தில் உணர்வேன்.

அதுவரையில், அந்த சிட்டுக் குருவிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, அவற்றை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் கைப்பிடியளவு அரிசி, கம்பு, தினைப் போன்ற தானியங்களை அந்த சிட்டுக் குருவிகளுக்காக என் பால்கனியில் இரவு நேரத்தில் போட்டுவிட்டு தூங்கினேன். அன்று இரவு முழுவதும் அரை குறையான தூக்கம். அந்த சிட்டுக் குருவிகள் நாம் போட்ட தானியங்களை உண்டு பழையபடி மகிழுமா என்ற கேள்வி எனக்குள். அதிகாலைப் பொழுது புலரும் அந்த இருட்டும், வெளிச்சமும் கலந்த வேளையில் “கீச் கீச்” ஒலியுடன் அதே சிட்டுக் குருவிகள் என் பால்கனியில். எட்டிப் பார்த்தால் ஓடிவிடுமோ என்ற அச்சத்திலேயே என் அறை விளக்கைக்கூட போடாமல் எவ்வித அரவமும் இல்லாமல் கதவு இடுக்கு வழியே பார்த்தேன். அதே பழைய உற்சாகத்துடன் அந்த சிட்டுக் குருவிகள் தானியங்களை உண்டும், சண்டையிட்டும் குலாவின. எனக்கு அளவில்லாத சந்தோஷம். காதலி காதலனிடம் காதலைச் சொன்ன அந்த தருணத்தில் உண்டாகும் வர்ணிக்க முடியாத உற்சாகம், உணர்வு போல் எனக்கு. ஒரு வகையில் வெற்றிக் களிப்பும்கூட. எதிர்வீட்டு அரிசிக்குக் கட்டுப்பட்டிருந்த அந்த சிட்டுக் குருவிகள் இப்போது என் பால்கனி தானியங்களுக்குக் கட்டுப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்று முதல் நான் சிட்டுக் குருவிகளுக்குத் தீனி போடாத நாட்களே இல்லை. வெளியூர் சென்றிருந்தாலும் அண்ணனிடம் குருவிக்கு அரிசி போட்டாயா என்று போனில் விசாரிக்கும் அளவுக்கு அது என் உள்ளார்ந்த கடமையானது. இதற்காக பலமுறை என் அண்ணனை நான் கடிந்துக் கொண்டதும் உண்டு.

இளம் பருவத்தில் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் என் இளமை கழிந்தது. அதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. தனித்திருக்கும் எனக்கு அந்த சிட்டுக் குருவிகளின் நட்பு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அதன் “கீச் கீச்” ஒலிதான் என்னை அதிகாலையில் எழுப்பும் பூபாளம். அவை மீது எனக்கு அலாதி பிரியம். சில நேரம் ஆர்வம் மிகுதியில் பால்கனிக்குச் சென்றால் அந்த சிட்டுக் குருவிகள் பறந்து சென்று சாலையில் எதிர்பக்கமுள்ள பாதாம் மரத்தில் அமர்ந்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி கேலி பேசும். பலமுறை அவ்வாறு நடக்கும். நான் உள்ளே சென்ற பின் மீண்டும் பால்கனிக்கு வந்து தீனி எடுப்பதோடு அவற்றின் சேட்டைகள் தொடரும். அப்போது அவை எழுப்பும் பலவிதமான “கீச் கீச்” ஒலியின் வேறுபாடுகள் அக்குருவிகளின் மனநிலையை உணர்த்தும். நினைவிலும், நேரிலும் ஆரத்தழுவி சுகம் காணும் காதலர்கள் போல், அந்த சிட்டுக்களோடு என் வாழ்க்கை குதூகலத்துடன் ஓடியது.

என் வாழ்க்கையில் நெஞ்சை அறுக்கும் துயரமாக “தானே” புயல் வந்தது. என் செல்ல சிட்டுக் குருவிகளுக்காக பால்கனியில் போட்டு வைத்திருந்த தானியங்களை வாறி சென்றன சூறாவளிக் காற்றுகள். அன்று முதல் என் காதல் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை. என் வாழ்க்கையில் மீண்டும் வெறுமை. புயல், மழை ஓய்ந்து வருமென நம்பி பால்கனியில் போட்டு வைத்த தானியங்கள் சீண்டுவாரின்றி அப்படியே கிடக்கின்றன. உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்கின்றன. புயலால் சாய்ந்து கிடந்த பாதாம் மரமும் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு மரம் இருந்ததற்கான அடையாளமே இல்லை இப்போது. என் சிட்டுக் குருவிகளுக்கு என்ன ஆயிற்று? தெரியவில்லை. அரிசி, கம்பு, தினை நிரப்பி வைக்கப்பட்டுள்ள பாட்டில்கள் திறக்கப்படாமலேயே கிடக்கின்றன. என் சிட்டுக் குருவிகளின் நினைவைப் பசுமையாக வைத்திருக்கின்றன அவை.

என் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: